தர்மபுரி மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்
தர்மபுரி, மாதர்மபுரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு சுகாதாரமற்ற முறையில் சமைத்த, தனியார் நிறுவனத்திற்கு, மாவட்ட கலெக்டர் சதீஸ், 10,000 ரூபாய் அபராதம் விதிக்க உத்தவிட்டார். தமிழகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள, தொடக்க பள்ளிகளுக்கு, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமையலறை ஒதுக்கப்பட்டு, அங்கு சமைக்கப்படும் காலை உணவு வாகனங்களில் கொண்டு சென்று நகராட்சிக்கு உட்பட்ட, 13 பள்ளிகளில் படிக்கும், 728 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சமையலுக்கு பயன்படுத்திய ஆயில், உப்பு, ரவை உள்ளிட்டவை காலாவதியாகி இருந்தது. மேலும், சமையல் கூடம் பராமரிப்பின்றி சுகாதாரமற்று இருந்தது. உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட, சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர்வைசரிடம் காலாவதியான உணவு பொருட்களை வைத்து, உணவு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் செய்யும் இடம் துாய்மையாக இருக்க வேண்டும். சமையல் கூட கூரையில் பெயின்ட் பெயர்ந்து, உணவில் விழும் நிலை உள்ளது. அதை சீரமைத்து, பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவை வழங்க, கலெக்டர் சதீஸ் அறிவுறுத்தினார். மேலும், சுகாதாரமற்ற நிலையில் சமையல் செய்ததால், சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து, தர்மபுரி டவுனில் உள்ள தெருக்கள், பள்ளி, விளையாட்டு மைதானங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், தெருநாய்களை பிடித்து, கருத்தடை செய்து, 10 நாட்கள் பராமரித்து, பின் அதை பிடித்த இடத்தில் மீண்டும் விட, நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.