காரிமங்கலம் பெண் கொலையில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, தர்மபுரி -- ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையோரத்தில், காரிமங்கலம் மந்தைவெளியை சேர்ந்த கணபதி மனைவி வள்ளி, 38, நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தனிப்படை போலீசார் விசாரணையில், கடந்த, 18 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்த வள்ளிக்கு கிருத்திகா என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில், மகனுடன் வசித்த வள்ளிக்கு, பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதோடு குடி, போதை பழக்கத்திற்கு அடிமையானார். அவருக்கு, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த லாரி டிரைவர் புஷ்பராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குஜராத்தில் இருந்து ஊர் திரும்பிய புஷ்பராஜ், வள்ளிக்கு பணம் கொடுப்பதாக கூறி, ஓசூர் அருகே அத்திப்பள்ளி வர கூறியுள்ளார். அவருடன் உறவினரான லாரி டிரைவர் மணிவேல், 42 என்பவரும் வந்துள்ளார். ஓசூர் அருகே, வள்ளியை லாரியில் ஏற்றிக்கொண்டு மூவரும், பாலக்கோடு அருகே வரும்போது ஏற்பட்ட தகராறில், வள்ளியை, இருவரும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் பாலக்கோடு போலீசார் நேற்று கைது செய்தனர்.