உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உடல் உறுப்புகளை தானம் வழங்கிய 26 பேர் இது மிகப்பெரிய சாதனை; சுப்பிரமணியம்

உடல் உறுப்புகளை தானம் வழங்கிய 26 பேர் இது மிகப்பெரிய சாதனை; சுப்பிரமணியம்

தர்மபுரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், கடந்தாண்டு மருத்துவ படிப்பு முடித்த, 88 மாணவ, மாணவியருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், மாணவர்களின் பெற்றோரை மேடையேற்றி அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சுப்பிரமணியம் ஆகியோர் கவுரப்படுத்தினார். தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில், 7.50 கோடி மதிப்பில், கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலைய கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அமைச்சர் சுப்பிரமணியம் பேசுகையில்,''மருத்துவ மாணவர்களை பட்டம் பெற வைப்பது, அவர்களின் பெற்றோர் தான். எனவே, பட்டம் பெறும்போது மாணவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து, பட்டம் பெறும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். சென்னை, கோவை, திருச்சி போன்ற அரசு மருத்துவமனைகளை விட, தர்மபுரி அரசு மருத்துவமனையில், கடந்த, 2 ஆண்டுகளில், மூளைசாவு அடைந்த, 26 பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர். இது மிகப்பெரிய சாதனை,'' என்றார்.தொடர்ந்து அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில், கூடுதல் கட்டடம் மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். விழாவில், மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், மருத்துவ துறை இணை இயக்குனர் சாந்தி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் (பொ) சிவக்குமார், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !