மைல் கல்லுக்கு ஆயுத பூஜை;சாலை பணியாளர்கள் வழிபாடு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள், உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமையில், சாலை ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலையில், ஆயுத பூஜையை கொண்டாடினர். அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தென்கரைகோட்டை பகுதியிலுள்ள ஏ.மள்ளிப்பட்டி - --மொரப்பூர் சாலையில், மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி, வாழைமரம் கட்டி, சந்தனப்பொட்டு, விபூதி, குங்குமம் பூசி, மாலை அணிவித்து, பொரி கடலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை, வாழை இலையில் வைத்து படையலிட்டனர்.தாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களான மண்வெட்டி, பாதுகாப்பு உபகரணங்கள், புல் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோன்று கடத்துார், பொம்மிடி பகுதியில் சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு ஆயுதபூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், சாலை பணியாளர்கள் சேதுபதி, தமிழரசன், சிவஞானம், செல்வராஜ், வெற்றிவேல், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.