ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக எல்லை பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 28,000 கன அடியாக குறைந்தது. மேலும் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. தொடர்ந்து நேற்று பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. தவிர மெயின் பால்ஸ்க்கு யாரும் செல்லாதபடி,நடைபாதைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.