வெடிகுண்டு மிரட்டலால் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தின் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு, கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. தர்மபுரியில், புதிய கலெக்டர் அலுவலகம் ஐந்து தளங்களுடன் செயல்படுகிறது.நேற்று மதியம், 2:00 மணிக்கு கலெக்டர் அலுவலக இ--மெயில் முகவரிக்கு, புதிய கலெக்டர் அலுவலகத்தில் ஜெலட்டின் குச்சி (வெடிகுண்டு) வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் சதீஷ், எஸ்.பி., மகேஷ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். அவருடைய உத்தரவின்படி, டி.எஸ்.பி., சிவராமன் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர் மற்றும் மோப்ப நாய்களுடன், அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். மாலை, 5:00 மணி வரை சந்தேகத்துக்கு இடமாக எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி, கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.