புற்றுநோய் விழிப்புணர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பயிற்சியை, தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் சாய் நெட்வொர்க் இணைந்து நேற்று முன்தினம் நடத்தியது. சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் தலைமை வகித்து பேசுகையில், ''உயிர் அணுக்களின் அதீத வளர்ச்சி, இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களின் மாற்றம் புற்றுநோய் உருவாக காரணமாகிறது. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவு குழாய் போன்றவற்றிலும், பெண்களுக்கு மார்பகம், வயிறு, நுரையீரல், குடல், கர்ப்பப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தியாவில் புற்றுநோய் பாதித்த மாநிலங்களில் தமிழகம், 5வது இடத்திலும், அதில் முதல், 5 இடங்களில், சென்னை, கோவை, திருவாரூர், கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. தர்மபுரி மாவட்டம், 14வது இடத்தில் உள்ளது. புகையிலை பயன்பாடு, மது, சுற்றுச்சூழல் மாசு, சரியான உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இந்நோய் தாக்குகிறது. தற்போது, 20 வயதுக்கு உட்பட்டவர்களையும் அதிக அளவில் இந்நோய் தாக்குகிறது,''என்றார்.