உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு லாரி ஓனர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு லாரி ஓனர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாலக்கோடு : பாலக்கோட்டிலுள்ள மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து, கரும்பு லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, திம்மம்பட்டியில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் அரவைக்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து, லாரி உரிமையாளர்கள் ஏற்றி வருகின்றனர். ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தங்களுடைய சொந்த டிராக்டரிலும் கரும்பை ஏற்றி வர அனுமதி அளித்துள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு உள்ள டிராக்டர்களை, வணிக நோக்கில் கரும்புகளை ஏற்றி வர, ஆலை நிர்வாகம் விதிமுறை மீறி அனுமதி வழங்கிய கண்டித்து, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், கரும்பு லோடு ஏற்றி வராமல் கடந்த, 4 நாட்களாக ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஆலை வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.இதுகுறித்து, லாரி உரிமையாளர் சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது:நாங்கள், அரசின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாகனத்தை இயக்கி வருகிறோம். ஆனால், எந்தவித வரியும் கட்டாமல் சொந்த பயன்பாட்டிற்னெ அனுமதி பெற்ற டிராக்டர்களை பயன்படுத்த, சர்க்கரை ஆலை நிர்வாகம் அனுமதியளித்து, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. மேலும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் என, 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டிராக்டர்களுக்கு கரும்பு லோடு ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ