தர்மபுரியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் சுகாதாரத்துறை எச்சரிக்கை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம், கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதில், டெங்கு காய்ச்சலின் பரவல், 2012 மற்றும், 2017 ல் அதிக அளவில் இருந்தது. மேலும், 3 ஆண்டுக்கு ஒரு முறை டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என, சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணமாக, செப்., மாதத்தில் மழைப்பொழிவு மற்றும் தட்பவெப்ப நிலை திடீர் மாற்றம் உள்ளிட்டவையால் வைரஸ் காய்ச்சல் உருவாகும். அதன் தொடர்ச்சியாக கொசுக்கள் மற்றும் லார்வா புழுக்களால் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்மையின் காரணமாக, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்டவை அதிவேகமாக பரவி ஒரே குடும்பத்தில் பலர் தொடர்ந்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் மற்றும் சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனே அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெறுதல் உள்ளிட்டவறறை தவிர்ப்பதால், தொடர்ந்து காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதில், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது அவசியம்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படாத வண்ணம் துரிதமான நடவடிக்கை சுகாதாரத் துறை மூலம், எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நாள்ளொன்றுக்கு, 2 முதல், 3 பேர், டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு என தனித்தனியாக டெங்கு காய்ச்சலுக்கான, 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், மாவட்டத்தில் உள்ள, 9 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையங்களில், 10 படுக்கைகள் வீதம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நடமாடும் மருத்துவ குழுவில், 9 மலை கிராமத்தில் ஒன்று என, 10 நடமாடும் மருத்துவ குழுவினர், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்குவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிப்படைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் சுகாதார குழுக்களை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.