| ADDED : ஆக 11, 2011 02:28 AM
அரூர் : ''வங்கி வேலைவாய்ப்புகள் பெற விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்டர்நெட் பயன்பாடு குறித்து நன்றாக தெரிந்திருக்க வேண்டும்,'' என இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் கார்த்திக்கேயன் பசினார்.அரூர் அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வங்கி கணக்கு துவக்கம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கருத்தரங்கில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கார்த்திக்கேயன் பேசியதாவது: இந்தியன் வங்கி உட்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிய தேர்வு எழுத ப்ளஸ் 2 படித்தால் போதும். கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்டர்நெட் பயன்பாட்டினை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்நெட்டில் கல்வி கடன்கள் பெறும் முறை குறித்த விபரங்களும் கிடைக்கும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள் பெண்கள் வங்கிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி போன்ற பகுதியில் இருப்பவர்களே தேர்வு எழுதி வேலைக்கு வருகின்றனர். இங்குள்ள மாணவர்களும் தேர்வு எழுதினால் எளிதில் வெற்றிபெற முடியும். ஆசிரியர் பயிற்சி பி.எட்., படிப்புகளை ஏராளமான மாணவர்கள் படித்து முடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு உடனே வேலைவாய்ப்புகள் கிடைக்காது. எனவே மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் படிப்புகளை தேர்வு செயய வேண்டும். வங்கிகளில் பெறும் கடன்களை இளம் தலைமுறையினர் முறையாக திருப்பி செலுத்த வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கின் போது 300 கல்லூரி மாணவியருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டது. இ.ஆர்.கே., கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி மேலாளர் கவுரி, உதவி மேலாளர் பழனியப்பன், ஆதிபராசக்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன், தலைமையாசிரியர் தீத்துமலை, நிர்வாக அலுவலர் அருள்குமார், கல்லூரி விரிவுரையாளர் புவனேஸ்வரி, சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.