7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தர்மபுரி மாணவர் மாநில அளவில் 9வது இடம்
பென்னாகரம், தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீஷ் நீட் தேர்வில், 520 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில், 9- வது இடத்தையும், தர்மபுரி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இவர் 2024 பிளஸ் 2 தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்றார். இவருடைய தந்தை விஜயகுமார் வேன் டிரைவராக உள்ளார். தாய் பழனியம்மாள்.இதுகுறித்து மாணவர் ஜெகதீஷ் கூறுகையில்,''நீட் தேர்வுக்காக அரசு பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படித்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்ணை விட, ஒரு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால், தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெற்று, இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதினேன். தற்போது, 520 மதிப்பெண் பெற்றுள்ளதால் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.