உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடிப்பெருக்கையொட்டி கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கையொட்டி கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. பழம் பெருமைகள் நிறைந்த தர்மபுரி மாவட்டத்தில் கற்கோவில்கள், நடுகற்கல் என அழைக்கப்படும் வேடியப்பன் ஸ்வாமி வழிபாடு முறையும், கிராமங்களில் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு காவல் தெய்வ வழிபாடுகள் உள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள காவல் தெய்வங்களுக்கும், அம்மன் கோவில்களிலும் ஆடி மாதம் சிறப்பு விழாக்கள் நடத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் காவல் தெய்வங்களை வழிபாடுவதோடு, ஆடி 18ம் அன்று காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்தந்த பகுதியில் மக்கள் வழிபடுவதோடு, காவல் தெய்வங்கள் மற்றும் கரகங்கள் எடுத்து ஊர்வலமாக ஒகேனக்கல் வந்து, காவிரியாற்றில் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு அன்று பூ குண்டம் இறங்கியும் பக்தர்கள் வழிபாடு செலுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரியில் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட காவல் தெய்வங்களுக்கு காவிரி படுகையில் பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரங்கள் செய்து, பூசாரிகள் கரகங்கள் எடுத்து ஊர்வலமாக ஸ்வாமியை ஊருக்கு அழைத்து சென்றனர். * தர்மபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி மாரியம்மன் கோவிலில், ஏழாம் ஆண்டு தீ குண்டம் இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 1ம் தேதி காலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் ஊர்வலமும், 2ம் தேதியும் அம்மன் ஊர்வலமும், நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் பூ குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து தீச்சட்டி எடுத்து பூங்கரகம் வீதி உலாவும், இரவு நாடகமும் நடந்தது.இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ