மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 பேர் கைது
அரூர், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, அரூரில், சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், 50 பேரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், நேற்று காலை, 11:30 மணிக்கு முற்றுகை போராட்டம் நடந்தது. வட்டத்தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, வட்டச்செயலாளர் வேலாயுதம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில், தமிழகத்தில் வருவாய்த்துறை மூலம், சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,500 ரூபாய், கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2,000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை, தற்போதைய விலைவாசி அடிப்படையில் போதுமானதாக இல்லை.ஆந்திரா அரசு தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம், 6,000 ரூபாய், கடும் ஊனமுற்றோருக்கு, 10,000 ரூபாய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 15,000 ரூபாயாக வழங்கி வருகிறது. எனவே, ஆந்திரா மாநிலத்தில் வழங்குவது போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வீடற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்து, பட்டா வழங்கியும், முறையாக இடங்களை தேர்வு செய்து வழங்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக இடம் வழங்கி அளவீடு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. தொடர்ந்து, அரூர் - சேலம் சாலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், 50 பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.