தர்மபுரி: தர்மபுரி நகர பகுதியில், அதிகரித்த போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். நேற்று, சுப முகூர்த்த தினம் என்பதால், தர்மபுரி மாவட்டத்தில், கோவில் விழாக்கள் மற்றும் பூ, காய்கறி சந்தைகளுக்கு பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த பொதுமக்கள், அங்கிருந்து பென்னாகரம், அரூர், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்களிலும், தாங்கள் வந்த டூவீலர்களிலும் புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று காலை முதல், தர்மபுரி நகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஒரே சமயத்தில் அதிகளவில் டூவீலர், கார், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை நகர பகுதிக்குள் வந்தன. அச்சமயத்தில், போக்குவரத்து போலீசார் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால், வாகனங்களை சீர்படுத்த முடியவில்லை. இதனால், சேலம், தர்மபுரி சாலை, பஸ் ஸ்டாண்ட் செல்லும் பகுதி, பென்னாகரம் சாலை, உள்ளிட்ட பகுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.