அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 187 மாணவ மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உள்ளிட்ட 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் நேற்று மாலை தலைமை ஆசிரியர் எஸ்சேந்திரா தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜயா மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட, 20 பேர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பள்ளி வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் விற்பனை செய்தது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, முறையான பதில் கூறாமல் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் ஜாதி பெயரை சொல்லி மாணவியரை திட்டுவதாகவும், இதனால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி. பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடத்துார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் இரவு 9:00 மணியை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள், சில மாணவியரிடம் சி.இ.ஓ.,விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து நேற்று இரவு 10:00 மணிக்கு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.