உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பரிசலில் கூடுதல் கட்டணம்; கண்டித்து பயணியர் மறியல்

பரிசலில் கூடுதல் கட்டணம்; கண்டித்து பயணியர் மறியல்

ஏரியூர் : தர்மபுரி மாவட்ட பகுதியான நாகமரை, ஒட்டனுாரிலிருந்து தினமும், சேலம் மாவட்ட பகுதியான பண்ணவாடி, கொளத்துார் பகுதிகளுக்கு, விசைப்படகுடன், பரிசல்கள் இயக்கப்படுகின்றன. பரிசல் இயக்க மூன்றாண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.இந்த பரிசல் பயணத்தை நம்பி, இரு மாவட்ட எல்லையில் வசிப்பவர்கள் உள்ளனர். இதே பயணத்தை சாலையில் கடக்கும் போது, 60 கி.மீ., அதிகமாக சுற்றி வர வேண்டும். இதனால், இரண்டு மணி நேரமும், அதிக செலவும் ஏற்படுகிறது. நாகமரை, ஏரியூர், ஒட்டனுார், நெருப்பூர், பென்னாகரம், கொளத்துார், பண்ணவாடி, மேட்டூர், சுற்றுவட்டார பகுதி மக்கள் தினமும் பரிசல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.ஒரு நபருக்கு, 15 ரூபாய், டூ - வீலருக்கு, 30 ரூபாய் என கட்டணம் வசூலித்து வந்த நிலையில், அதையே தற்போது, 20 ரூபாய் மற்றும் 40 ரூபாய் என உயர்த்தி உள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் நெருப்பூரில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, வரும் 10ம் தேதி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !