ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கஅரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்பாப்பிரெட்டிப்பட்டி, அக். 2---தர்மபுரி மாவட்டம், கடத்துார் யூனியனிலுள்ள இராமியம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, தாதனுார், குருபரஹள்ளி, இராமியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்கள் அடங்கும். இக்கிராம மக்கள், கர்ப்பிணிகள் தங்களுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டால், இந்த மருத்துவமனையை நாடிச்செல்ல வேண்டும். கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவதற்கும், ஸ்கேன் பார்க்கவும், பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக தாளநத்தம் பஞ்.,ல் உள்ள, 7 கிராமங்கள், கேத்துரெட்டிபட்டி பஞ்.,ல் உள்ள கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகள், 10 கி.மீ., துாரமுள்ள இராமியம்பட்டிக்கு சென்று தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லை. இருசக்கர வாகனங்களில் தான் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் செல்ல முடியாமல், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 10 கிராமங்களை மையப்படுத்தி தாளநத்தம் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த, இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.