தீர்த்தமலை கோவிலுக்கு ரோப் கார் வசதிக்கு கோரிக்கை
அரூர், தீர்த்தமலையில் உள்ள மலை கோவிலுக்கு செல்ல, ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்த கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நாள்தோறும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு செல்லும் பாதை சில இடங்களில் சேதமடைந்துள்ளது.இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதியடைகின்றனர். மேலும், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை ஏற மிகவும் சிரமப்படுகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, மலைக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து தரக்கோரி, பல ஆண்டுகளாக அமைச்சர், கலெக்டர் என பலரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கும் பக்தர்கள் இக்கோரிக்கையை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.