யானைகளால் விவசாயம் பாதிப்பு அகழிகள் அமைத்துத்தர கோரிக்கை
தர்மபுரி :பென்னாகரம் அருகே, யானைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதால், அகழிகள் அமைக்க, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பூதிப்பட்டி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தின் அருகே, பென்னாகரம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள பயிர்கள் பாதுகாப்பிற்காகவும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், பென்னாகரம் அருகே செக்போஸ்டில் இருந்து, கோடுபள்ளம் வரை, 7 கி.மீ., துாரத்திற்கு அகழி அமைக்கப்பட்டது. இதில், பாறைகள் இருந்த இடத்தில் மட்டும், அகழி அமைக்கவில்லை. இதனால், பாறைகள் உள்ள பகுதிகள் வழியாக, யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த, 2024 அக்., 25ல், வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அப்போது, அகழியை ஆழப்படுத்த வேண்டும். பாறைகள் உள்ள இடங்களில் வெடி வைத்து தகர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.கடந்த, 15ம் தேதியன்று ஊருக்குள் புகுந்த யானைகள், பயிர்களை சேதப்படுத்தின. எனவே, எங்கள் பகுதியில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, அகழியை முழுமையாக அமைத்து, ஆழப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.