மெணசியில் புதிய வங்கி துவங்க வேண்டுகோள்
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 2---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியில் புதிய வங்கி கிளை துவங்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கிராமத்தைச் சுற்றி பூததநத்தம்,குண்டல்மடுவு, விழுதிப்பட்டி, ஆலாபுரம், தோளனூர், ஜீவா நகர் உள்ளிட்ட, 10 ககும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான பண பரிவர்த்தனை செய்வதற்கு தேசிய வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இப்பகுதியில் இல்லை. வங்கிகளுக்குச் செல்ல வேண்டுமானால் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ராமியனஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள், சிறு குறு விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் வங்கி கடன் பெறவும், முதலீடு செய்யவும், பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தை நாடி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் மையபகுதியான மெணசி கிராமத்தில் தேசிய அல்லது தனியார் வங்கிகள் தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.