ஏ.டி.எம்., மையத்தில் தவறவிட்ட ரூ.10,000 உரியவரிடம் ஒப்படைப்பு
ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இயங்கி வரும் இந்தியன் வங்கி அருகே ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்த விஸ்வநாதன், 73, என்பவர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 10 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்த போது, பணம் வரவில்லை. கணக்கில் மட்டும் பணம் வந்ததாக காட்டியுள்ளது. இதையடுத்து வங்கி மேலாளர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து அதே ஏ.டி.எம்., மையத்தில் உப்பாரப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமார், 34, என்பவர் பணம் எடுக்க வந்தபோது, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து, திடீரென 10 ஆயிரம் ரூபாய் வெளியே வந்துள்ளது. உடனடியாக அந்த பணத்துடன் ஜெயக்குமார், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்று போலீசாரிடம் நடந்ததை கூறினார். உடனடியாக உரிய நபரை அழைத்து விசாரித்து, 10 ஆயிரம் ரூபாயை உரிமையாளர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். ஜெயக்குமாரை போலீசார் பாராட்டினர்.