போட்டோ மட்டும் எடுத்து ரூ.100 சம்பளம்! 100 நாள் வேலையில் ரூ.219ஐ திரும்ப கேட்பதாக புகார்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், கம்மம்பட்டி பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், ஊழியர்கள் சம்பளத்தை திரும்ப கேட்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்.,சில், 12,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, 100 நாள் வேலைக்கு, 1,400 பேர் அட்டை பெற்றுள்ளனர். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி என்பதால், அரசு அலுவலர்கள் பணிகள் குறித்த ஆய்வுக்கு பெரும்பாலும் வருவதில்லை. அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், ஐந்து ஆண்டுளாக ஊழல் நடக்கிறது. கடந்த மாதம் முத்து பூசாரி நகர் பாறைக்காடு பகுதியில், 30 பேருக்கு, 100 நாள் வேலையில் தினமும் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்; வீட்டுக்கு சென்று விடலாம் என, தெரிவித்தனர். இதையடுத்து, 12 நாட்கள் மட்டும் போட்டோ எடுத்துவிட்டு, அனைவரும் வீட்டுக்கு சென்றோம். ஆறு நாட்களுக்கான சம்பளம், 1,914 ரூபாய் நேற்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கம்மம்பட்டியை சேர்ந்த முன்னாள் பணிதள பொறுப்பாளரின் கணவர் ரங்கசாமி, ஒவ்வொரு வீடாக சென்று நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் எடுத்துக் கொண்டு, 219 ரூபாய் திரும்ப கொடுக்குமாறு கேட்டார். 'தர முடியாது' என கூறியவர்களிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு உள்ளார். எனவே, 100 நாள் வேலையை மற்றவர்கள் தலையீடு இன்றி, முழுமையாக வேலை செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ரங்கசாமியிடம் கேட்டபோது, ''யாரிடமும் நான் பணம் கேட்கவில்லை. மேலும், நான் பணிதள பொறுப்பாளராகவும் இல்லை. முத்துபூசாரி நகரில் சாலை பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் தான், வேலை ஆட்கள் போட்டோ எடுக்க வந்தால், 100 ரூபாய் தருவ தாக கூறியுள்ளனர். மற்றபடி எனக்கும், 100 நாள் வேலைக்கும் சம்பந்தம் இல்லை,'' என்றார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலர் பிரதாபன் கூறுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் பணிதள பொறுப்பாளர்கள், பஞ்., செயலர்கள், ஓவர்சீஸ், பி.டி.ஓ., ஆகியோர் கூட்டு கொள்ளை அடிக்கின்றனர். ''போலி பில்கள் மூலம் பணம் எடுக்கின்றனர். இந்த தகவல் மத்திய அரசுக்கு சென்றதால் தான், தமிழகத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தினர்,'' என்றார்.