தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு பதற்றமின்றி தேர்வெழுதிய மாணவர்கள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 10 மையங்களில் நீட் தேர்வு நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் முன்னேற்பாடுகளால், மாணவர்கள் பதற்றமின்றி தேர்வெழுதினர்.தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் அமைக்கப்பட்ட, மூன்று மையங்களில், 1,440, செட்டிகரை கேந்திர வித்யாலயா, 480, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 480, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 480, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி, 480, அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 480, பாப்பாரப்பட்டி மாடல் பள்ளி, 480, மற்றும் மகளிர் பள்ளியில், 480 என, 10 தேர்வு மையங்களில், 4,800 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். பிற்பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடந்தது. முன்னதாக, தேர்வர்கள் காலை, 11:00 மணி முதல், 1:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்களை தேர்வெழுத வழியனுப்ப வந்த பெற்றோர் கடும் வெயிலையும் பொடுட்படுத்தாமல், தேர்வு மையங்களுக்கு வெளியில் காத்திருந்தனர். தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் முன்னேற்பாடுகளால், பதற்றம் மற்றும் அலைச்சலின்றி மாணவர்கள் தேர்வெழுதினர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு, 4,800 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 4,741 மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். 131 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், 4,610 மாணவர்கள் தேர்வெழுதினர். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, தவறுதலாக சேலம் மாவட்டத்திற்கு சென்ற, 9 மாணவர்களில், 7 மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்தனர். சரண், ஹரிணி என இரு மாணவர்கள் மட்டும் தாமதமாக வந்ததால், தேர்வெழுத முடியவில்லை.ஹால் டிக்கெட்டில் குளறுபடி என கூறப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் ஹால் டிக்கெட்டில், தேர்வு மையத்திற்கான முகவரியில், அரசு கலைக்கல்லூரி-பி சேலம் பைபாஸ் ரோடு, கலெக்ட்ரேட் (அஞ்சல்), 636 705 என, பின் கோடுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், தர்மபுரி என இல்லாததால், மாணவர்கள் சேலம் மாவட்டத்திற்கு தவறுதலாக சென்று விட்டதாக கூறினர்.