செப்., ஊதியம் வழங்க கோரி ஆசிரியர் பயிற்றுனர்கள் மனு
தர்மபுரி: செப்டம்பர் மாத ஊதியம் வழங்க கோரி, சி.இ.ஓ.,விடம் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பணியாளர்கள் சார்பாக, நேற்று மனு அளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான, செப்டம்பர் மாத ஊதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை.இதன் காரணமாக, 602 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வங்கி கடன், மாதத் தவணை உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர். இது சார்ந்து, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ.,வை நேரில் சந்தித்து உடனடியாக, ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு அளித்தோம். திங்கட்கிழமைக்குள் ஊதியம் வழங்கா விட்டால், அடுத்த கட்ட போராட்டமாக, பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவர்.இவ்வாறு கூறினர்.