உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வத்தல்மலைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி அரசுக்கு மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்

வத்தல்மலைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி அரசுக்கு மலைக்கிராம மக்கள் வேண்டுகோள்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து, 3,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, சின்னாங்காடு, கொட்லாங்காடு, ஒன்றிக்காடு, பால்சிலம்பு, பெரியூர், குழியனுார், நாய்க்கனுார், மன்னாங்குழி, கருங்கல்லுார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000 மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கடத்துார், பொம்மிடி, தர்மபுரி சென்று வருகின்றனர். இம்மக்கள் மருத்துவ சிகிச்சை பெற, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், ஒரு டாக்டர், நான்கு செவிலியர்கள், ஒரு உதவியாளர் உள்ளனர். அனைத்து மக்களும் காய்ச்சல், சளி உள்ளிட்ட, நோய்களுக்கு இங்கு சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், விபத்து, பிரசவம், பாம்பு கடி உள்ளிட்டவைகளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் கிடைக்கிறது. முழு சிகிச்சை பெற வேண்டும் எனில், தர்மபுரியில் இருந்து, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வரும் வரை, 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளது. அதற்குள் சிகிச்சை பெற முடியாத நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மலை பகுதி என்பதால், எந்நேரமும் விஷ ஜந்துக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மக்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வரவில்லை எனில், வாடகை கார், பைக் உள்ளிட்டவைகள் மூலம், நோயாளிகளை அழைத்து செல்லும் நிலை உள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வத்தல் மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மாக, 108 அவசரகால ஆம்புலன்ஸ், அல்லது ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த, அரசுக்கு மலைகிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை