மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
அரூர்:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், அரூர் வட்ட, 6வது மாநாடு, அரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. வட்ட தலைவர் காந்தி தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் மகேந்திரன் சங்க கொடியேற்றினார். மாநில தலைவர் வில்சன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் தமிழ்செல்வி வேலை அறிக்கை வாசித்தார். மாநில இணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் கரூரான், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஆந்திராவை போன்று உதவித்தொகை, 6,000, 10,000, மற்றும் 15,000 ரூபாய் என உயர்த்தி வழங்குவதுடன், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016ஐ அமல் படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 100 நாள் வேலையை, 150 நாட்களாக உயர்த்தி, தினக்கூலி, 334 ரூபாய் வழங்குவதுடன், இத்திட்டத்தை நகர்புறங்களிலும் விரிவுபடுத்த வேண்டும். இலவச வீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும். மனுகொடுத்த அனைத்து மாற்றத்திறனாளிகளுக்கும் ஏ.ஏ.ஒய்., கார்டு வழங்க வேண்டும். வங்கி கடன், மூன்று சக்கர வண்டி, வீல்சேர் மற்றும் உபகரணங்களை அலைக்கழிக்காமல் உடனே வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான, 5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அரூர் பஸ் ஸ்டாண்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.