ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் தடை
ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்ததால், அங்கு குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு, 37,403 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நடைபாதைக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுவதால், மெயின் பால்ஸூக்கு செல்லும் பாதைக்கு பூட்டு போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறாவது நாளாக குளிக்க தடை தொடரும் நிலையில், நேற்று மீண்டும் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.