பெயரளவில் கூட இல்லை வசதிகள்; சின்னாளபட்டியில் நீடிக்கும் அவலம்
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் போதிய ரோடு, தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் இல்லாமல் இங்கு வசிப்போர் மட்டுமின்றி கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் பாதிப்பிற்கு உள்ளாகும் அவலநிலை உள்ளது. சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் 15வது வார்டில் முத்தமிழ் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள நாயக்கர் முதல், 2வது, 3வது தெருக்கள், சோடா கம்பெனி தெருக்களில் போதிய ரோடு, சாக்கடை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் பின்னடைவு நீடிக்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லையால் இப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர், கழிவுநீர் செல்லும் வடிகால் துார்ந்த நிலையில் சில இடங்களில் அசுத்த நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது.சில குடியிருப்புகளில் நிலத்தடி உறிஞ்சும் குழிகள் அமைத்துள்ளதால் தவளை நடமாட்டம் அதிகரித்து பாம்பு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் அவல நிலை உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் நகரின் சில தெருக்களில் மட்டுமே சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. தார் ரோடு அமைமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன் பேவர்பிளாக் கற்கள் தோண்டப்பட்டு குழிகள் கிடப்பில் விடப்பட்டுள்ளதால் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள், முதியோர் தெருக்களை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். டூவீலர்களில் வருவோர் தடுமாற்றத்தில் தவறி விழும் பரிதாப சூழல் தொடர்கிறது.சிறுமின் விசை தண்ணீர் தொட்டி, சுற்றிலும் பராமரிப்பின்றி பாசி படர்ந்து குடிநீருக்காக வருவோரை அவதிக்குள்ளாக்கி வருகிறது. விழாக்களின்போது தெருக்களில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதும் பேரூராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிப்பது இல்லை. ஒலி, காற்று மாசு காரணமாக இப்பகுதியினர் பாதிப்படைகின்றனர்.இப்பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளனர். கொசுத்தொல்லை தாராளம் காந்தி,தொழிலாளி : குடியிருப்பு முழுவதும், தார், சிமென்ட் ரோடு வசதியின்றி குண்டும் குழியுமாக உள்ளது. சாக்கடை, மழை நீர் கடந்து செல்வதற்கான வடிகால் வசதிகள் இல்லை. இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரிப்பால் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சேதமடைந்த மின்கம்பம், ரோட்டிலோ, குடியிருப்பு மீதோ விழக்கூடிய விபத்து அபாயத்தில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தபோதும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் அளிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. போதிய தெருவிளக்கு வசதி இல்லாத நிலையில் பெரும்பாலான பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது. வெளிச்சமற்ற விளக்குகள் முருகன்,மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளர், சின்னாளபட்டி: ரோடு சீரமைப்பு அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தேவையான இடங்களை தவிர்த்து வீணாகும் பகுதிகளை தோண்டி வைத்துள்ளனர். விபத்துக்குள்ளாகும் அவலமும் நீடிக்கிறது. தெருவிளக்குகள், குறைந்த ஒளி உடையதாக மாற்றினர். இவற்றில் பல அடுத்தடுத்து பழுதாகி விடுகின்றன. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கணிசமான எண்ணிக்கையில் பழுது கூடினால் மட்டுமே வெளியூர் ஒப்பந்ததாரர்களை கொண்டு சீரமைக்கப்படும் என பொறுப்பின்றி பதில் அளிக்கின்றனர்.