திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அடிக்கடி நடக்கும் முறையற்ற மின்வெட்டுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை தினமும் பாதிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை இதனால் பாதிக்கப்படுவதால் மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.திண்டுக்கல்லில் மின்வாரியம் சார்பில் டிரான்பார்மர் பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒருமுறை மின்தடை அறிவிக்கப்படுகிறது. இதை சுதாரித்து கொள்ளும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றனர். ஆனால் அறிவிப்பில்லாமல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளால் சமையல் செய்வதிலிருந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் பெண்கள் உட்பட பலரும் பரிதவிக்கின்றனர். மின் சாதனங்களை பயன்படுத்தி இயங்கும் தொழிற்சாலைகள் முடங்குகின்றன. இரவில் சொல்லவே வேண்டாம் மின்விசிறிகள் செயல்பாட்டில் இருக்கும் போதே கொசுக்கள் மக்களை துாங்க விடுவதில்லை. இதில் மின்வெட்டுகள் ஏற்படும் நேரத்தில் அவ்வளவு தான் அழையா விருந்தாளிகளாக வந்து மக்களை கடித்து குதறுகிறது. இதோடுமட்டுமில்லாமல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,அரசு தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்கள் இரவு நேரங்களில் அவதிக்குள்ளாகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆடிக்காற்று வீசும் போது சொல்லவே வேண்டாம் எங்கேயாவது மரக்கிளைகள் ஓடிந்து மின் ஒயர்கள் அறுந்து விடுகிறது. அப்போது மழையுடன் காற்றும் வீசுவதால் மின்வாரிய ஊழியர்கள் அதை சீரமைக்க காலதாமதங்கள் ஏற்படுகிறது. இதனாலும் ஒருசில பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடையால் ஏற்பட மக்கள் துாங்காமல் தவிக்கின்றனர். மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் எந்த பதிலும் பேசாது அழைப்பை துண்டிக்கின்றனர். தொடரும் இப்பிரச்னைகளால் கர்ப்பிணிகள், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கின்றனர். மின்வாரியத்தினர் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தடுக்க வேண்டும்
கார்த்திக்வினோத், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர், திண்டுக்கல்: மின்வெட்டுதான் தற்போது 3 ஆண்டுகளாக அதிகளவில் நடக்கிறது. இரவு,பகல் பாராமல் நடக்கும் மின்வெட்டுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் தவிக்கின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்காகவே அதிகமானோர் கடன் வாங்கியாவது இன்வெட்டர் வாங்கி வைக்கின்றனர். அந்த அளவிற்கு மோசமான நிலையில் மின்வாரியம் செயல்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிப்பு வெளியிடுகின்றனர். அந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ஏன் மின்வெட்டுகள் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும். மாணவர்கள்தான் அவதி
அருண், உதவி பேராசிரியர்,திண்டுக்கல்: அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளால் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு நேரங்களில் இரவு நேர மின்வெட்டுகளில் சிக்கி தங்கள் எதிர்காலத்தை தொலைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. மின்வாரிய அதிகாரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மின்வெட்டுகள் ஏற்படாமல் தடுக்க என்ன வழி செய்யலாம் என்பதை சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.