| ADDED : ஏப் 18, 2024 05:47 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மது விற்றவரை போலீசில் பிடித்து கொடுத்த பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுத்த தி.மு.க.,கவுன்சிலரிடம் பணம் கொடுக்கிறீர்களா என கூறி வாக்குவாதம் செய்தார். இது போல் தி.மு.க., வினர் பணம் கொடுப்பதாக கூறி சுயேச்சை வேட்பாளரும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.திண்டுக்கல் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது காலை 10 :00மணிக்கு திண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள கொட்டபட்டியில் கோடவுனில் மது விற்பனை செய்வதை கண்டார். இதன் மீது நடவடிக்கை கோரி வேட்பாளர் திலகபாமா கட்சியினருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த போலீசார் மது விற்ற இருவரை பிடித்து சென்றனர்.ஜி.டி.என். ரோடு பகுதியில் பூத் சிலிப் வழங்கிக் கொண்டிருந்த 16 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சேகரிடம் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா'' நீங்கள் எதற்காக பூத் சிலிப் வழங்குகிறீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கிறீர்களா'' என கூறிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சேகர் டூவீலரில் சென்றுவிட்டார்.அங்கு வந்த மாநகராட்சி பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகளிடம் வாக்காளர் தகவல் சீட்டுகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இதனிடையே திண்டுக்கல் தொகுதியின் பல்வேறு இடங்களில் தி.மு.க., பணம் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சுயேச்சை வேட்பாளர் சதீஷ்கண்ணன் குற்றம்சாட்டினார். பணம் விநியோகிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.பாதுகாப்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றச்சாட்டுகள் குறித்து புகார் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துவிட்டு சென்றனர்.