குஜிலியம்பாறை : முறையான பராமரிப்பு இல்லாததால் வாணிக்கரை கன்னிமார் கோயில் குளம் 20 ஆண்டுகளில் 2022 ல் மட்டுமே நிரம்பி உள்ளது.வாணிக்கரை கன்னிமார் கோயில் குளம் 98 ஏக்கரில் உள்ளது. இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் வசதி பெறும். போதிய பராமரிப்பு இல்லாததால் 20 ஆண்டுகளில் 2022 ல் மட்டுமே இக்குளம் நிரம்பி உள்ளது.குளத்துப்பட்டி , குழந்தை கவுண்டன்பட்டி கரட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீரானது வாய்க்கால்கள் மூலம் இந்த குளத்திற்கு வரும். இந்தக் குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதியே பசுமையாக இருக்கும். இந்த குளம் தற்போது வரண்டு கிடக்கும் நிலையில் குளத்தில் உள்ள கருவேல முட்களை அகற்றி குளத்தை முறையாக துார்வாரி வரும் மழை காலத்திலாவது தண்ணீர் நிறைந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் . குடகனாறு அணை பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து இந்த குளத்தை நிரப்ப வேண்டும். இல்லையேல் காவிரி தண்ணீரைக் கொண்டு வந்து நிரப்பும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொய்த்து போய் விடும்
கே.நல்லம்மாள், விவசாயி, கரட்டுப்பட்டி: இங்கு தேங்கி நிற்கும் குளத்து தண்ணீரை மதகுமூலம் திறந்து விட்டு இரண்டு கோடையில் நெல் எடுத்தது ஒரு காலம். இரவும் பகலுமாக தண்ணீர் பாய்ச்சுவோம். தற்போது குளம் முற்றிலுமாக வரண்டு விட்டது. இனி குளத்திற்கு தண்ணீர் வந்து, குளம் நிரம்பி விவசாயம் பார்ப்போம் என்பதெல்லாம் மாறிவிட்டது. இந்தப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி 3 கி.மீ., துாரம் உள்ள குடகனாறு அணையில் இருந்து கிளை வாய்க்கால் அமைத்து குளத்தை நிரப்ப வேண்டும். அல்லது காவிரி தண்ணீரை ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அப்போதுதான் விவசாயம் செழிக்கும். இல்லையே இப்பகுதியில் விவசாயம் என்பது பொய்த்துப் போய் விடும். நீர்மட்டம் குறைந்துவிட்டது
என்.சுரேஷ் குமார், சமூக ஆர்வலர், வேடசந்துார்: அழகாபுரி அணை குடகனாறு ஆற்றை ஒட்டி உள்ள பகுதிதான் என்றாலும் அணையின் நீர் பிடிப்பு இப்பதிகளுக்கு இல்லை. தற்போது பெரும்பாலான கிணறுகள் , போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்துவிட்டது. இருக்கிற தென்னை மரங்களை பாதுகாப்பது கூட தற்போதைய காலகட்டத்தில் சிரமமாக உள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி வணிக்கரை குளத்தை காவிரி நீரால் நிரப்ப வேண்டும். எதிர்பார்க்கிறோம்
கே.பொன்னுச்சாமி, சமூக ஆர்வலர், குழந்தைகவுண்டன்பட்டி: கடந்த ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இந்த குளத்தை துார் வாரி கரையை வலுப்படுத்தினர். தற்போது குளம் பகுதி முழுவதும் கருவேலம் முட்கள் நிறைந்து காணப்படுகிறது. குளத்துப் பகுதியில் உள்ள அந்த முட்களை அகற்றி வரத்து வாய்க்காலை துார்வாரி குளத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் நல்ல மழை பெய்து குளம் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.