| ADDED : மே 26, 2024 12:54 AM
கொடைக்கானல்:கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழாவை முன்னிட்டு ஏரியில் மிதிபடகு போட்டி நடந்தது.மலர் கண்காட்சி, கோடை விழா இன்றுடன் முடியும் நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் கொடைக்கானல் ஏரியில் நேற்று -படகு போட்டி நடந்தது. உள்ளூர், வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் பங்கேற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீதர், வசந்தன் முதல் பரிசை பெற்றனர்.பெண்கள் இரட்டையர் போட்டியில் நிவேதிதா, ஸ்ரீத்து முதல் பரிசு, கலப்பு இரட்டையர் பிரிவில் ஹில்மா, போதிசித்தார்த் முதல் பரிசை பெற்றனர். நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் காயத்ரி பரிசுகளை வழங்கினர்.கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். பிரையன்ட் பூங்காவில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், அரங்குகளில் காட்சிபடுத்தப்பட்ட பூக்கள், பல வண்ணங்களில் பூத்துள்ள பூக்களையும் ரசித்தனர்.கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்களையும் ரசித்த பயணியர், ஏரி சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மழையின்றி பளிச்சிட்ட நிலையில் அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டத்தையும் பயணியர் கண்டு ரசித்தனர்.