உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலங்கள் இல்லை, ரோடு பழுதால் பரிதவிக்கும் மக்கள்

பாலங்கள் இல்லை, ரோடு பழுதால் பரிதவிக்கும் மக்கள்

வடமதுரை: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் இரு இடங்களில் பாலம் இல்லாததாலும், ரோடும் சேதமடைந்து கிடப்பதாலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.அய்யலுார் கோம்பை, புத்துார் முடிமலை பகுதிகளில் பெய்யும் மழைநீர் இரு வரட்டாறுகளாக உருண்டோடி கெங்கையூரில் சங்கமிக்கின்றன. இதுதவிர அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சேகரமாகும் மழை நீர் முட்டுக்கொம்பு ஓடையாக பயணித்து கோப்பம்பட்டி அருகில் பிரதான வரட்டாற்றில் சேர்கிறது. இவை மூன்றும் ஒன்று சேர்ந்த பெரிய ஆறாக மோர்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, நல்லமனார்கோட்டை வழியே குடகனாற்றில் சேர்கிறது. இந்த வரட்டாறு பிலாத்து ரெட்டியபட்டி ரோட்டை கடக்கும் பகுதி ஆற்றில் வலுவான நீர் செல்லும் தன்மையால் அதிக ஆழம் கொண்ட பகுதியாக மாறியுள்ளது. இவ்வற்றில் நீர் வரத்து இருக்கும், இல்லாத காலங்களிலும் கனரக வாகனங்களில் லோடு ஏற்றிசெல்வது சிரமமாக உள்ளது. இங்கு பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தகுதியற்றதாக உள்ளது

எஸ்.வேல்முருகன், கட்டுமான பணி ஒப்பந்ததாரர், வாலிசெட்டிபட்டி: பிலாத்து ஊராட்சி சார்ந்த மெத்தபட்டி, கம்பிளியம்பட்டி, வாலிசெட்டிபட்டி, பிலாத்து பகுதியினர் அதிகளவில் வடமதுரை செல்வதற்கு ரெட்டியபட்டி வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். இது தவிர இப்பகுதியில் களத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள், விளை நிலங்கள் வைத்திருப்போர் என பலருக்கு இந்த ரோடு மட்டுமே வெளியே செல்ல ஒரு வாய்ப்பு. ஆனால் இந்த ரோட்டில் வடமதுரை பேரூராட்சி பகுதியில் காலமுறையில் புதுப்பித்தல் பணி நடந்தாலும், பிலாத்து ஊராட்சி பகுதியில் ரோடு பழுதடைந்த நிலையில் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது.

-முட்புதர்களால் ஆபத்து

பி.பழனிச்சாமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், பி. கம்பிளியம்பட்டி: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் பெரிய வரட்டாறும், மோர்பட்டி தடுப்பணையில் இருந்து தும்மலக்குண்டு கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் பகுதியிலும் பாலம் இல்லாமல் இருப்பது மிகுந்த சிரமத்தை தருகிறது. ஊராட்சி பகுதியில் இருக்கும் ரோடும் பல இடங்களில் தார் முற்றிலும் மாயமாகி வெறும் கற்கள் மட்டுமே பரவி கிடப்பதால் போக்குவரத்து மிகவும் கஷ்டம் தரும் விஷயமாக உள்ளது. பல இடங்களில் இரு பக்கமும் வளர்ந்திருக்கும் முட்புதர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தாக உள்ளது.

-பணி துவங்கவில்லை

வி.திருமலைச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், பிலாத்து: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கிடும் பகுதி வளைவாகவும், ஆழமாகவும் இருப்பதால் பல வகையிலும் போக்குவரத்திற்கு அதிக துன்பம் தரும் விஷயமாக உள்ளது. இதனால் இங்கு பாலம் அமைக்க இரு விவசாயிகள் நிலத்தை அரசிற்கு வழங்கி உள்ளனர். ஆற்றின் போக்கு வளைவாக இருப்பதை கருத்தில் கொண்டு அதையே எண்ணிக்கையில கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும். அதிக வெள்ள நீர் வந்தால் கரைப்பகுதி பாதிப்பில்லாமல் பாலம் தப்பும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி