| ADDED : ஏப் 26, 2024 12:34 AM
திண்டுக்கல் : சித்ரா பவுர்ணமி திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை அபிராமி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் நேற்று இரவு தசாவதாரங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா ஏப். 22ல் தொடங்கியது. அன்று முதல் சவுந்தரராஜ பெருமாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஏப்.23ல் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து எதிர்சேவையில் அன்று இரவு தாடிகொம்பு ரோடு கருப்பண சுவாமி கோயில் வந்தடைந்தார். நேற்று முன்தினம் இரவு அபிராமி அம்மன் கோயில் வந்த பெருமாள் நேற்று காலை 10:00 மணிக்கு அங்கிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கிழக்கு ரத வீதி, நெட்டுத்தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியே வெள்ளை விநாயகர் கோயில் அருகே உள்ள டி.டி.எஸ்., கம்யூனிட்டி ஹால் பகுதிக்கு வந்தடைந்தார்.தொடர்ந்து அங்கு டவுன் சவுராஷ்டிர மகாஜன சபையாரின் மண்டகப்படி நடந்தது. பின்னர் அங்கு தசாவதாரங்களில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இறுதியாக தீப அலங்காரம் நடந்தது. இதை தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருள திரு அவதார நிகழ்ச்சி நடக்கிறது.