UPDATED : மே 07, 2024 07:03 AM | ADDED : மே 07, 2024 06:15 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள், வெளியூர் மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர் . இங்கு சில நபர்கள் சாலையோரங்களில் சிம் கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும் நபர்களுக்கு சிம் கார்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் சிம்கார்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் தருகிறது. இதனால் இவர்களில் பலர் குறைந்த விலையில் சிம் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.சிம்கார்டு விற்கும் நபர்கள் முறையாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த பதிவை சிம்கார்டு விற்பனைக்கு தரும் நிறுவனங்களே செய்ய உதவி புரிகின்றனர். சாலை ஓரங்களில் சிம் கார்டு விற்பனை செய்யும் நபர்களின் முகவரிகள், ஏஜன்டுக்கான இருப்பிடங்கள் வேறு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவர்கள் தாலுகா அலுவலகம், வி.ஏ.ஒ., அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறிய குடைக்கு கீழ் வைத்து வியாபாரம் செய்வார்.குறைந்த விலைக்கு சிம் கார்ட் வாங்க வரும் கிராம மக்கள் ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்ட அடையாளங்களை சாலையோர நபர்களிடம் ஒப்படைப்பர். இதன் மூலம் அவர்கள் ஒரு சிம் கார்டை ஆக்டிவேட் செய்வது மட்டுமில்லாமல் அதை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து வைத்து கொள்வர்.சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு சிம் கார்டு மட்டும் வழங்கிவிட்டு மற்ற சிம் கார்டுகளை கையில் வைத்துக் கொள்ள போலி சிம் கார்டுகள் உருவாக்கப்படுகின்றன. வேறொருவருடைய அடையாளங்களை பதிவு செய்த ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம்கார்டுகளை வழங்குகின்றனர். இவர்களிடம் குறிப்பாக தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாத வட மாநில தொழிலாளர்கள் சிம்கார்டுகளை எளிதாக பெற்று செல்கின்றனர். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதில் போஸ்ட் பெய்டு, பிரீபெய்ட் சிம் கார்டுகள் இரண்டு வகையில் உருவாக்கப்படுகிறது. இதில் உருவாகும் போலிசிம் கார்டுகள் வெளியூர், உள்ளூரில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கு எவ்வித ஆவணம் இன்றி அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் லாபம் அடைவதோடு சமூக விரோத செயல்களுக்கு அவர்களை அறியாமல் துணை போகின்றனர். இதை கண்காணித்து தடுக்க போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது........கண்காணிக்க வேண்டும் சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளின் உண்மை தன்மை குறித்து போலீசார் தெரிந்து போலி சிம் கார்டுகளை விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிம்கார்டுகள் விற்க பதிவு செய்யப்படும் ஏஜன்ட் முகவரிகளை தவிர வேறு முகவரியில் சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்ய நிறுவனங்கள் முன்வரக்கூடாது .இதனை ஜி.பி.எஸ்., முறையில் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களும் இதுபோன்ற நபர்களிடம் சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் .இதனால் சமூக விரோத செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்கள் முறையாக ஜி.எஸ்.டி., பெற்ற கடைகள் நகராட்சி,மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கடைகளில் சிம் கார்டுகளை வாங்குவது பாதுகாப்பாக இருக்கும்.கணேசன், அலைபேசி கடை ஊழியர் ,பழநி.