மதுவை நோக்கி பயணிக்கிறது தமிழகம் நல்லசாமி குற்றச்சாட்டு
பழநி:''தமிழகம் மதுவை நோக்கி பயணிக்கிறது,'' என, பழநியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: கள் விடுதலை கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கொங்கல் நகரத்தில் நடக்க உள்ளது. இதில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். தமிழகத்தில் மதுவிலக்கு என்பது இல்லை. ஆனால் மதுவிலக்கு போலீசார் உள்ளனர். மதுவிலக்கு போலீசார் கள் இறக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளிகளுக்கு அருகே போதை வஸ்துகள் எளிதாக கிடைக்கிறது. பீஹாரில் மதுவிலக்கு உள்ளது. இதனால் குற்றங்கள் குறைந்துள்ளன. பீஹாரில் கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்பிற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளனர். இது தமிழகத்தை மதுவிலக்கு கொள்கையில் இருந்து மாற்றி மதுவை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்கிறது. வாக்காளர்கள் பணம் பெற்று ஓட்டு போடும் முறை தமிழக முழுவதும் உள்ளது. இது ஜனநாயகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். தேர்தல் ஆணையம் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.