ஆண்டுதோறும் டோல்கேட் கட்டண உயர்வை ஏற்க முடியாது * வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேச்சு
சின்னாளபட்டி:''ஆண்டுதோறும் டோல்கேட் கட்டண உயர்வை ஏற்க முடியாது,'' என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார்.இம்மாவட்டத்தில் 18 இடங்களில் நடந்த பேரமைப்பு கொடியேற்று விழாவில் பங்கேற்ற விக்கிரமராஜா பேசியதாவது: உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளில் மாற்றம் தேவை. அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக அரசு சட்ட விதிகளை மாற்றுவதாக வணிகர்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது. வணிக வரித்துறையிடம் இருந்து வணிகர்களை மத்திய அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அரிசிக்கும் 5 சதவீதம் வரி என்பதை முறைப்படுத்தக்கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டணம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் டோல்கேட் கட்டண உயர்வை ஏற்க முடியாது. காலாவதி டோல்கேட்களை அகற்றுவதாக கூறி ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. அவை எப்போது அகற்றப்படும் என்பதை வெளிப்படையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தவறினால் டில்லியை நோக்கி போராட்டம் நடத்தப்படும்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்க நாற்கரச்சாலை திட்டத்தை சேவையாக துவக்கினார். தற்போது அது வணிக முறையாக மாறி வருகிறது. வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு அரசியல் கட்சிகள் சீட் கொடுத்தால் அவர்களை வெற்றி பெற செய்வோம். ஆனால் அரசியல் பாதைக்கு செல்ல மாட்டோம் என்றார்.