நாய்கள் தாக்கியதில் 18 ஆடுகள், 8 கோழிகள் பலி
கன்னிவாடி; கன்னிவாடி அருகே ஆடு வளர்ப்பு பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் தாக்கியதில் 18 ஆடுகள், 8 கோழிகள் பலியாகின. டி.புதுப்பட்டி வடக்கு தோட்டத்து சாலையில் வசித்து வரும் விவசாயி செந்தில்குமார். தனது தோட்டத்தில் தடுப்பு வேலியுடன் பட்டி அமைத்து 20 ஆடுகளை பராமரித்து வருகிறார். இதே பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார்.நேற்று காலை மேய்ச்சல் முடித்தபின் பகல் நேர ஓய்வுக்காக தோட்டத்து சாலை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். 10 கோழிகளை முட்டையிடுதல், அடை காத்தலுக்காக இதை பட்டியில் வைத்திருந்தார். வெவ்வேறு பணிகளுக்காக குடும்ப உறுப்பினர்கள் கிராமத்திற்குள் சென்றிருந்த நிலையில் பட்டி வேலிக்குள் தெருநாய்கள் தாக்கியதில் ஆடுகள், கோழிகள் இறந்து கிடந்தன. செந்தில்குமார் கூறுகையில், இப்பகுதியில் தெரு நாய்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் உள்ளது. ஆட்கள் இல்லாத நிலையில் தடுப்பு வேலியின் தரைப்பகுதியில் குழி பறித்து பட்டிக்குள் புகுந்துள்ளன. இவை கடித்து தாக்கியதில் 18 ஆடுகள், 8 கோழிகள் உடல் சிதைந்து இறந்து கிடந்தன. 2 ஆடுகளை நாய்கள் இழுத்து சென்றுள்ளன, என்றார்.வருவாய், கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.