| ADDED : டிச 31, 2025 05:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2600 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் நீதிமன்றம் உத்தரவின்படி அழிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையை உணவு பாதுகாப்புத்துறை தடுத்து அவற்றை பறிமுதல் செய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பஸ், ரயில்கள், வாகனங்களில் கடத்தி வரப்படும் குட்கா, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து நீதி நடவடிக்கைக்கு உட்படுத்துகின்றனர். கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட பொருட்களை அழிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதிக்கேட்டனர். மூன்றாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆனந்தி, உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்த குட்கா, பான் மசாலா பொருட்களை அழிக்க உத்தரவிட்டார். அதன்படி நியமன அலுவலர் கலைவாணி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் உணவுப்பாதுகாப்பு துறையினர் 2600 கிலோ குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை முருகபவனத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழித்தனர்.