பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை: 6 பேர் கைது
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் சென்ற கரூர் பைனான்சியரை வழிமறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் வெங்கமேடு எம்.கே.நகரைச் சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளர் கோவர்த்தனன் 38. இவர் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர். இவர் செப்., 11ல் கொடைக்கானலுக்கு நண்பர் சதீஷூடன் காரில் சென்றார். வடமதுரை கொல்லப்பட்டி பிரிவு அருகே எதிரே காரில் வந்தவர்கள் கோவர்த்தனன் காரை வழிமறித்து அரிவாளை காட்டி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். வடமதுரை போலீசார் விசாரணையில் மதுரை மாவட்டம் மேலுார் சாத்தமங்கலம் அருண்பாண்டியன் 37, வில்லாபுரம் தவமணி 27, பழங்காநத்தம் சத்யராஜ் 27, புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் மேலமுத்துகாடு தணிகாசலம் 26, சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ராஜேஷ் 28, கமுதி சீமாநேந்தலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் கோவா சென்றுவிட்டு விமானம் மூலம் ஊர் திரும்பியபோது கைது செய்யப்பட்டனர்.