| ADDED : நவ 24, 2025 12:31 AM
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு மாரம்பாடியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி, விழுந்து உடைந்ததால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வேடசந்தூர் கிழக்கு மாரம்பாடியில் 700 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 1999ல் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளைக் கடந்த நிலையில் தொட்டி, அதன் நான்கு பில்லர்களும் (கால்களும்) சேதமடைந்து இருந்தன. அதனை இடித்து புதிதாக கட்டி தர இப்பகுதி மக்கள் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களுக்கு பல முறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் ஏற்றப்பட்ட நிலையில், சிதிலமடைந்த மேல்நிலைத் தொட்டி பாரம் தாங்காமல் அதிகாலை 2:00 மணிக்கு இடிந்து விழுந்தது. தொட்டியின் ஒரு பகுதி உடைந்து கீழே விழ தண்ணீர் வெளியேறியது. அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, வீடுகள் உள்ள நிலையில் அதிகாலை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.