தமிழக முஜிப்பை பாராட்ட வந்த 70 கேரள முஜிப்கள்; ஒரே பெயர் கொண்டவர்கள் சந்திப்பு
திண்டுக்கல்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்திய ஓட்டல் உரிமையாளர் முஜீப்பை மாநிலம் கடந்து வந்து முஜீப் என பெயர் கொண்ட 70 பேர் பாராட்டி சென்றனர்.திண்டுக்கல்லைச் சேர்ந்த முஜீப் ரவுண்ட் ரோடு பகுதியில் ஆக.,7 வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிடும் வகையில் தன் ஓட்டலில் ஓட்டல் அசோசியேஷன், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு மொய் விருந்து நடத்தினார். அன்று உணவு அருந்திய பின் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை இலையின் அடியில் வைத்து விட்டு சென்றனர். இந்த விருந்து மூலம் கிடைத்த ரூ.2.16 லட்சம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாராட்டும் விதம் கேரளா மாநிலத்தில் முஜீப் என்ற பெயர் கொண்ட 14 மாவட்டங்களை சேர்ந்த 70 பேர் நேற்று திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜீப் வரவேற்றார். நிதி உதவி வழங்கிய முஜீப்பை பாராட்டி அவருக்கு பரிசு, கேடயத்தை அவர்கள் வழங்கினர். கேரளாவிலிருந்து வந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. தங்கள் மாநிலத்திற்கு உதவிய தமிழக முஜீப்பை பாராட்டி கேரளாவில் உள்ள 70 முஜீப்புகள் வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.