10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 855 பேர் ஆப்சென்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 10,838 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 9,761 மாணவர்கள், தனியார் பள்ளிகளைச் சார்ந்த 4,523 மாணவர்கள் என 25,122 பேர் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 12,599 மாணவர்கள், 12,523 மாணவிகள் அடங்குவர். இவர்களில் நேற்று நடந்த தேர்வில் 855 பேர் எழுதாது ஆப்சென்ட் ஆகினர்.ஏப். 15 வரை நடக்கும் இத்தேர்வில் திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 65 தேர்வு மையங்களில் 15,953 மாணவர்களும், பழநி கல்வி மாவட்ட அளவில் 47 தேர்வு மையங்களில் 9,169 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட அளவில் 10 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. பறக்கும் படை அமைக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் தலைமையில் 224 மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினராக நியமிக்கப்பட்டு தேர்வு நன்முறையில் நடைபெறுவதை கண்காணித்தனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் உரிய நேரத்தில் வினாத்தாள் சென்றடைய 27 வழித்தட அலுவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.இத்தேர்வுப்பணியில் 120 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 120 பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர்களாகவும், 1,256 ஆசிரியர்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தனித்தேர்வர்கள் தேர்வு எழுத திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 4 மையங்களும், பழநி கல்வி மாவட்ட அளவில் 4 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. இதில் 655 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர் நியமனம், கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டது. எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். முதல் நாள் தேர்வில் 580மாணவர்கள், 275 மாணவிகள் என 855 பேர் எழுதாது ஆப்சென்ட் ஆகினர்.