பட்டா உண்டு நிலம் இல்லை; உருண்டு வந்து கோரிக்கை
திண்டுக்கல் : பட்டா உண்டு நிலம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 247 பேர் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட 247 மனுக்களும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, ஆர்.டி.ஓ., கிஷன்குமார், நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன் கலந்துகொண்டனர். 6 பயனாளிகளுக்கு ரூ.39,500 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். உருண்டு வந்து மனு அளிப்பு
திண்டுக்கல்லையடுத்த கொசவபட்டி அருகே கல்லுக்குத்து ஓடை பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளிக்க வந்தனர். இதில் வந்த பாப்பராசு மனுவை கையிலேந்தியபடி தரையில் உருண்டபடி வந்தார். அவர்கள் கூறியதாவது: இங்குள்ள பேபி குளத்திலிருந்து செம்மடைப்பட்டி சங்கையாகவுண்டன் குளம் வரை உள்ள நீர்வழிப்பாதையை தனிநபர் ஒருவர் பட்டா நிலம் எனக்கூறி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யக்கோரி பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இவ்வாறு மனு அளித்தோம் என்றனர்.பட்டா உண்டு நிலம் இல்லை: பழநி கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுவில், கோதைமங்கலம் கொத்தனார் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. 2022ல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் இன்றைய துணை முதல்வர் உதயநிதி பட்டாக்களை வழங்கினார். 39 பேரில் 14 பேருக்கு மட்டுமே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு இடம் ஒப்படைக்கப்படாத நிலையில் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி என கூறிக் கொண்டு வசூலில் ஈடுபடும் சில நபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பழநி ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் என பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு சார்பில் பட்டா வழங்கிவிட்டு 2 ஆண்டுகளாக மனையை ஒதுக்கீடு செய்யாமல் மாற்றுத்திறனாளிகளான எங்களை அலைக்கழிக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.