சீமை கருவேல மரங்களின் பிடியில் முத்து சமுத்திரம் குளம்
ஒட்டன்சத்திரம்; பரப்பலாறு அணையில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் முத்து சமுத்திரம் குளம் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் விருப்பாச்சி ஊராட்சி சாமியார்புதுாரில் அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் நடை பெறுகிறது. குளம் நிரம்பும்போது பல கி.மீ., துாரம் உள்ள கிணறுகள், போர்வெல்களுக்கு நீராதாரமாக உள்ளது. பெருமாள் குளத்தில் இருந்து உபரி நீரை பெறுவதன் மூலம் இக்குளம் நீர் வரத்தை பெறுகிறது. பெருமாள் குளத்திலிருந்து சின்ன கரட்டுப்பட்டி வரை பிரதான வாய்க்கால் 1.5 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. இதிலிருந்து கிளை வாய்க்கால் இரண்டாக பிரிந்து முத்துசமுத்திரம் குளம், காவேரியம்மாபட்டி பெரிய குளத்திற்கு செல்கிறது. குளங்களுக்கு தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. மேடான பகுதி என்பதால் 10 அடி முதல் 20 அடி ஆழம் வரை வாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் போது மண் சரிந்து வாய்க்கால் மேடாகி புதர் மண்டி காணப்படுகிறது. இதனை உடனடியாக துார்வார நடவடிக்கை எடுப்பதோடு மேடு பள்ளங்களை சீர்படுத்தி சிமென்ட் தளத்துடன் கான்கிரீட் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் சீமை கருவேலம் மரங்கள் முளைத்து காணப்படுகிறது. குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயை துார் வாருங்க
பெரியசாமி, தமிழ்நாடு விவசாய சங்க ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர்: பரப்பலாறு அணை தண்ணீர் பெருமாள் குளம் வந்து அது நிரம்பி மறுகால் செல்லும்போதுதான் இக்குளத்திற்கு நீர் கிடைக்கிறது. பல ஆண்டுகள் பெருமாள் குளம் நிரம்புவதே இல்லை. அந்தக் காலங்களில் இந்த குளம் வறண்டே காணப்படும். குளங்களுக்கு வரும் வாய்க்காலை உடனடியாக சீரமைக்கவும் வருங்காலத்தில் சிமென்ட் வாய்க்காலாக மாற்றுவதற்கும் கோரிக்கை வைத்தேன். பொதுப்பணித் துறையினர் வாய்க்காலை துார்வாரி தருவதாக கூறினர். அப்பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும். கருவேல மரங்களை அகற்றுங்க
தங்கராஜ், விவசாயி: குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகள், சீமை கருவேல மரங்களை அகற்றி துார்வாரி குளக்கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் உள்ள செடி கொடிகளையும் அகற்ற வேண்டும். பரப்பலாறு அணை தண்ணீரை தனி வாய்க்கால் மூலம் இங்கு கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் சிறந்து விளங்கும்.