காதலித்த பெண் சந்திக்க மறுப்பு வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வேடசந்துார்:வேடசந்துார் அருகே வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், முருநெல்லிகோட்டையைச் சேர்ந்தவர் சக்தி முனியப்பன், 28. பி.எட்., முடித்துள்ள இவர், போலீஸ் தேர்வுக்கான பயிற்சி எடுக்கிறார். இவரது வீட்டருகே வசிக்கும் மனோஜ்குமார், 22, என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை சந்திக்க அந்த பெண் மறுத்தார். 'சந்திக்க மறுத்தால் வெட்டுவேன்' என, மனோஜ்குமார் கூறியதாக தெரிகிறது.இதை, சக்தி முனியப்பனிடம், அந்த இளம்பெண் கூறிய போது, 'அந்த வாலிபருடன் ஏன் பழகுகிறாய்' என, சக்தி முனியப்பன் கண்டித்ததாக தெரிகிறது. இதையறிந்த மனோஜ்குமார் நேற்று, சக்தி முனியப்பனை அரிவாளால் வெட்டினார்; திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை வெட்டிய மனோஜ் குமாரை, வேடசந்துார் போலீசார் தேடுகின்றனர்.