ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்க்ல மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து,விளக்கேற்றி பெண்கள் தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி 4ம் வெள்ளி என்பதால் நேற்று அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 6 :00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து தரிசனம் செய்தனர். கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், நத்தம் ரோடு, அஷ்டலட்சுமி மலையடிவாரம் பத்திரகாளியம்மன், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ஜான்பிள்ளை சந்து அபிராமியம்மன் கோயில், தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி, கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன் என மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சின்னாளபட்டி: தேவி கருமாரியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது. பால நாகம்மாள் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு, மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில், கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில், விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மன் கோயில்ளில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. நத்தம்: மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. அன்னக்கூழ் வழங்கபட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைப்போலவே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன், குட்டூர் உண்ணாமுலை அம்மன், பகவதி,காளியம்மன், தில்லை காளியம்மன்,வாராஹி அம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.