கைவிடப்பட்ட அம்மா பூங்காக்கள்; வீணாகும் அரசு பணம்
திண்டுக்கல்: புறநகர் , கிராமங்களில் அனைத்து வசதிகளுடன் நவீன உடற்பயிற்சிக் கூடத்துடன் அமைக்கப்பட்ட அம்மா பூங்காக்கள் பெரும்பாலனான இடங்களில் கைவிடப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கில் அரசு பணம் வீணாகிறது. அ.தி.மு.க., ஆட்சியின்போது 2016--17 ம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அம்மா பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊராட்சிகளில் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடிய ஊராட்சிகளில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இந் த பூங்காக்கள் ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் 15,000 முதல் 20,000 சதுர அடியில் அமைக்கப்பட்டது. ஒரு பூங்காவிற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டன. இந்நிலையில் பெரும்பாலான பூங்காக்கள் பராமரிப்பின்றி கேட்பாரற்று பொதுமக்கள் பயன்பாடின்றி உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, நத்தம் புன்னபட்டி, நிலக்கோட்டையில் கோட்டூர், ஒட்டன்சத்திரத்தில் விருப்பாட்சி, பழநியில் அமரபூண்டி, சின்னகலையம்புத்துார், ரெட்டியார்சத்திரம் குட்டத்துப்பட்டி, சாணார்பட்டி அருகே கூவ னுாத்துபுதுார், வேடசந்துார் அருகே தட்டாரபட்டி உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இந்த பூங்காக்கள் அனைத்திலும் நடைபயிற்சி மேற்கொள்ள தளம், அமரும் வகையில் இருக்கைகள், சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறைகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது. ப யன்பாடின்றி திறக்கப்படாததால் செடிகள் வளர்ந்து முட்புதர்களின் பிடியில் உள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் துருபிடித்து வீணாகும் நிலையும் உள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் முருகன், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர், திண்டுக்கல்: அ.தி.மு.க., ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 11 ஊராட்சிகளில் அம்மா பூங்காக்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டன. கிராம இளைஞர்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடத்துடன் அமைக்கப்பட்டது. குழந்தை கள் விளையாடுவதற்கும் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொருட்டும் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதை போன்று அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அவற்றை கண்டுகொள்ளாமல் பராமரிக்காமல் கிடப்பில் விட்டு விட்டனர். இந்த பூங்காங்களை தற்போது புதுப்பித்தாலும் மக்களின் பயன்பாட்டிற்கு உதவும். புதிதாக உருவாக்காமல் இருப்பதை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா பூங்காக்களும் கைவிடப்படும் நிலையில் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் வீணாகிறது. கிராமமக்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணாதுரை, செயலாளார், வி.என்.வளாக குடியிருப்போர் நலச்சங்கம்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவில் அனைத்துமே திருடர் களுக்கு சொந்தமாகி விட்டது. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் திருடு போய் விட்டன. கழிப்பறைகளுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் செடிகள் வளர்ந்துள்ளன. பேவர் பிளாக்களுடன் நடைபயிற்சிக்கு உகந்த இடமாக இருந்தாலும் யாரும் பயன்படுத்தாததால் நடைபயிற்சி தளம் முழுவதும் முள்செடி, புற்களும் முளைத்துள்ளன. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதனை மீண்டும் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் கிராம மக்கள், இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும். தீர்வு குழந்தைகள் விளையாட, முதியவர்கள் நடைபயணம் மேற்கொள்ள என ஒரே இடமாக இருப்பது பூங்காக்கள் தான். ரோடு விரிவாக்கம் என்ற பெயரில் பெரும்பாலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பதால் பூங்காக்களை தவிர நடைபயணங்களுக்கு வேறு மாற்று இடமே இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களோ பெரும்பாலும் பராமரிப்பின்றி தான் இருக்கின்றன. அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பூங்காக்களை புதுப்பிக்கலாம். முட்புதர்களை வெட்டினாலே பாதி பூங்கா மீட்டது போல் ஆகி விடும். உடற்பயிற்சி நிலையத்தை புதுப்பித்து குறைந்த கட்டணம் வசூலித்து வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கலாம். காவலாளி நியமனம் செய்தால் இருக்கிற பொருட்கள் திருடுபோவதை தவிர்க்க முடியும். விளக்குகளை சரிசெய்து இருப்பதை பராமரித்தாலே பூங்கா உபயோகமாக மாறிவிடும்.