உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளர் நலச்சட்டம் பின்பற்றாவிடில் நடவடிக்கை

தொழிலாளர் நலச்சட்டம் பின்பற்றாவிடில் நடவடிக்கை

திண்டுக்கல்: '' தொழிலாளர் நலச்சட்டங்கள் பின்பற்றவில்லையென ஆய்வின் போது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடை , நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் '' என தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி (அமலாக்கம்) தெரிவித்தார்.

தொழிலாளர் துறையின் பணிகள் ...

தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் தொழிலாளர் நலச் சட்டங்கள், எடையளவுச் சட்டம் ஆகியவை அமலாக்கம் செய்வதன் மூலம் தொழிலாளி ,வேலையளிப்பவர் இடையே சுமூகமான சூழ்நிலை உருவாக்குதல் தொழில் நல்லுறவு ஏற்படுத்துவதோடு, தொழிலாளர் நலன் உறுதி செய்யப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குதல், தரப்படுத்தப்பட்ட எடையளவுகள் சட்டம் , பொட்டலப் பொருள் விதிகள் ஆகியவற்றை அமலாக்கம் செய்வதன் மூலம் தொழிலாளர் , நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படுகிறது

தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆய்வு...

தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு எடை, அளவுகள், பெட்ரோல் பம்புகள் சரிபார்த்து அரசு முத்திரையிடப்படுகிறது. மேலும் பொட்டலப் பொருள் முகவரி, நிகர எடை, நாள்,வருடம், எம்.ஆர்.பி., அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, நுகர்வோர் கேர் தொடர்பு எண், புகார் எண் ஆகிய அனைத்தும் ஒவ்வொரு பொட்டலப் பொருளிலும் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, இருக்கை வசதிகள், வெளிச்சம் , ஒய்வு இடைவேளை, குறைந்தபட்ச கூலி வழங்கப்படுகிறதா என்பனவற்றை ஆய்வின் போது உறுதி செய்யப்படுகிறது. விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கை ...

கொத்தடிமை முறையினை ஒழிக்க மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட தொழிலாளிக்கு உடனடி நிவாரணத் தொகை ரூ.30 ஆயிரம் அரசால் வழங்கப்படுவதோடு, போலீசார் மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூனில் ஒருவர் கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.1800 -4252- 650 என்ற இலவச டோல் ப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் நாள் கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கான வழிகள் ...

கடை, நிறுவனங்களில் நின்று கொண்டே பணியாற்றுபவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத நிறுனங்கள் மீது வழக்கு தொடர வழி வகை செய்யப்பட்டுள்ளது. 4 மணி நேர பணிக்கு பின்னர் ஓய்வு இடைவேளை தராத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கபடுகிறது. பண்டிகை விடுமுறை தினங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் வேலை நேரம், பணி இடைவேளை, மிகை நேர பணி ஊதியம், பணியாற்றும் சூழல் ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்து குறைகளை களைவதோடு தவறும் நிறுவனங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படுகிறார்களா ...

வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீட்டு பள்ளியில் சேர்த்து , பணிக்கு அமர்த்திய வேலையளிப்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது.நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராத தொகையினை குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றியவரின் வங்கிக் கணக்கிற்கு கலெக்டர் மூலம் மாற்றம் செய்து அவர்களின் வாழ்வு மேம்பட உதவி செய்யப்படுகிறது.மீட்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக அரசின் உதவித் தொகையான ரூ.15 ஆயிரம் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு பெற்றுத் தரப்படுகிறது.

வளரிளம் பருவத்தினர் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறதா...

எந்த ஒரு இளம்பருவத்தினரும் 6 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. வேலை செய்யும் போது 3 மணி நேரத்திற்கு பிறகு 1 மணி நேரம் ஓய்வு அளித்தல், இரவு 7:00 மணிக்கு பின்பும், காலை 8 :00 மணிக்கு முன்பும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒரே நாளில் 2 நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும். போன்றவற்றை ஆய்வின் போது காண்காணித்தல் பணிகள் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. புகார்களை 1098 இலவச எண்ணில் அணுகலாம்.

புலம்பெயர்ந்ததொழிலாளர்களுக்கு உதவிகள் உண்டா...

வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் தமிழகத்தில் குடியேறிபணிபுரியும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளர் விபரங்கள் உரிமையாளரால் சேகரிக்கப்பட்டு வெளிமாநிலத் தொழிலாளர் வெப் போர்ட்டலில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பேரிடர் நிகழ்வு நேரங்களில்மேற்கண்ட பதிவுகள் அடிப்படையில் அந்நபர்களுக்கு நல உதவிகள் வழங்குவதற்கு உதவியாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை