கடைகளுக்கு கூடுதல் வரி வர்த்தக சங்கம் எதிர்ப்பு
வேடசந்துார், : வேடசந்துார் பேரூராட்சியில் கடைகளுக்கான வரி விதிப்பை ஏழு மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறி வரி செலுத்த மறுத்து வருவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.வேடசந்துார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு ஆண்டுதோறும் உரிமை கட்டணம் என்ற பெயரில் வரி வசூல் செய்து வந்தனர். இந்த கட்டணமானது அதிகபட்சமாக ரூ.150 வரையே இருந்தது . இந்நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு கடைக்கும் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 750 வரை வசூல் செய்கின்றனர். இந்த தொகையையும் மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து வழங்க வேண்டும் என கூறி வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வரியை வழக்கம்போல் குறைத்த பிறகுதான் செலுத்த வேண்டும் எனவர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் கூறியதாவது: எப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு கடைகளுக்கும் கூடுதலாக வரி விதித்துள்ளனர். ஒரு கடைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 100 முதல் அதிகபட்சமாக மளிகை கடைகளுக்கு ரூ.250 வாங்கி வந்தனர். தற்போது மளிகை கடைகளுக்கு ரூ.750 கேட்கின்றனர். அதுவும் மூன்று ஆண்டுக்கு சேர்த்து ரூ. 2250 செலுத்த வேண்டும் என்கின்றனர். சாதாரண பெட்டிக்கடை, டீக்கடை வைத்துள்ளவர்கள் வெகுவாக பாதிக்கின்றனர். கடந்த காலங்களில் வாங்கியதை போல் முறையான, நியாயமான வரி வசூலை செய்ய வேண்டும் என்கிறோம். தற்போது விதித்துள்ள கூடுதலான வரி விதிப்பை வர்த்தக சங்கத்தினர் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.